இந்து முன்னணி பிரமுகர் கொலையில் ஊடகங்கள் சொன்ன கதைகள்!
விருதுநகர் மாவட்டம் சங்கரன்கோவிலில் இந்து முன்னணி நகரச் செயலாளர் ஜீவராஜ் என்பவர் நேற்று முந்தினம் கொலை செய்யப்பட்டார்.
சங்கரன்கோவில் காந்திநகரை சேர்ந்தவர் ஜீவராஜ் (37). இந்து முன்னணி நகர செயலாளரான இவர், அவரது வீட்டருகே கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்தக் கொலை அரசியல் உள்நோக்கத்தோடு நடத்தப்பட்டதாக இந்து முன்னணி ராம கோபாலன் உள்பட இந்துத்துவ ஊடகங்கள் அனைத்தும் குற்றம் சாட்டின. ஆனால் இந்தக் கொலையை ஜீவராஜின் முதல் மனைவியே செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து முதல் மனைவியான அய்யம்மாளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஜீவராஜுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி பெயர் அய்யம்மாள். போலீஸாரிடம் அய்யம்மாள் கொடுத்த வாக்குமூலத்தில், ’எனது கணவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினசரி குடித்து விட்டு என்னிடம் சண்டை பிடிப்பார். அவரைத் திருத்த முயன்றேன். முடியவில்லை. இதையடுத்து எனது பெற்றோர் வீட்டுக்குப் போய் விட்டேன். நான் போனதால் கோபமடைந்த அவர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். அவரிடம் சண்டை பிடித்தேன். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவில்லை. மாறாக என் கண் முன்பாக அவர் அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்தார். இது எனக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் ஜீவராஜைக் கொலை செய்யத் திட்மிட்டேன். சம்பவத்தன்று நான் வீட்டுக்கு வந்தபோது அந்தப் பெண் அங்கு இல்லை. எனது கணவரும் நல்ல போதையில் இருந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்டு வீட்டில் இருந்த அரிவாள் மனையை எடுத்து கணவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு வீட்டுக்கு வெளியே உடலைப் போட்டு விட்டேன்’ என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்தச் சம்வத்தில் இரண்டு விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒன்று, ஒழுக்கத்தை ஊருக்கு போதிக்கும் ஒரு இந்துத்துவ அமைப்பு தன் அமைப்பில் உள்ளவர்களின் ஒழுக்கம் பற்றி எப்படிப்பட்ட வரையறையை வைத்திருக்கிறது என்பது பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அவர்கள் குடிகாரர்களாக இருக்கலாம்; முதல் மனைவியிடம் இருந்து முறையாக மணவிலக்கு பெறாமலேயே இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்; சைக்கோத்தனமாக ஒன்னொருவர் எதிரிலேயே உறவு கொள்ளலாம்; பொறுக்கியாக இருக்கலாம்; போலீஸால் தேடப்படும் 420 ஆக இருக்கலாம். இப்படிப்பட்ட வரையறைக்குள் வருபவர்கள்தான் பெண்கள் எப்படிப்பட்ட உடையணிய வேண்டும், எப்ப்டி பேச வேண்டும், எதை எழுத வேண்டும், எப்படிப்பட்ட வேலைகளை செய்ய வேண்டும் என்று போதிக்கிறார்கள். இப்படிப்பட்ட போதனைகளை கேட்கும் இந்தியப் பெண்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள்!
அடுத்த விஷயம் ஊடகங்கள் புனையும் செய்தி பற்றியது. உதாரணத்துக்கு ஒரு மாலை நாளிதழ் நேற்று இந்தச் சம்பவம் குறித்து எழுதியிருக்கும் செய்தி எவ்வகையில் ஊடக அறத்துக்குள் வரும் என்பதை வாசகர்கள் நீங்களே படித்து தெரிந்து கொள்ளும்படி கேட்கிறேன்.
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் நள்ளிரவு இந்து முன்னணி மாஜி செயலாளர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பாட்டத்தூரைச் சேர்ந்தவர் ஜீவா என்ற ஜீவராஜ்(37). இந்து முன்னணி நகரச் செயலாளராக இருந்த இவரை 3 மாதத்திற்கு முன் கட்சி மேலிடம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்தது.இவரது முதல் மனைவி அய்யம்மாள். இவர்களுக்கு 2 பெண் குழந்தை, 2 ஆண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன் கரடிகுளத்தைச் சேர்ந்த சர்மிளாதேவி(28) என்பவரை 2வதாக ஜீவா திருமணம் செய்தார். சர்மிளாதேவி சங்கரன்கோவிலில் உள்ள நூற்பாலையில் வேலைபார்த்து வருகிறார். பாட்டத்தூர் மேற்கு பகுதியில் சமீபத்தில் கட்டிய புது வீட்டில் ஜீவா தனது இரு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.நேற்று கணவருடன் ஏற்பட்ட தகராறில் முதல் மனைவி அய்யம்மாள் கோபித்துக்கொண்டு அதே ஊரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். சர்மிளாதேவி இரவு ஷிப்ட் பணிக்கு சென்றார். குழந்தைகள் வீட்டிற்குள் தூங்கினர். ஜீவா வீட்டையொட்டி உள்ள முனீஸ்வரன் கோயில் முன்பு கட்டில் போட்டு தூங்கினார்.நள்ளிரவு அங்கு வந்த மர்ம கும்பல் கோயில் முன்பிருந்த விளக்கை அடித்து நொறுக்கினர்.
பின்னர் ஜீவா முகத்தில் மிளகாய் பொடி தூவினர். இதனால் எரிச்சல் ஏற்படவே அவர் அலறினார். உடனே தப்பி ஓட முயன்ற அவரை அந்த கும்பல் மடக்கிப்பிடித்து கோழி அறுப்பதுபோல் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்றனர். தந்தையின் அலறல் சத்தம் கேட்டு மகன் வல்லரசு வெளியில் வந்து பார்த்தான். அங்கு தந்தை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அழுதபடி வீட்டு வாசலில் மயங்கி சரிந்தான். இன்று காலை பணி முடிந்து வீடு திரும்பிய சர்மிளாதேவி கணவர் இறந்து கிடந்ததை கண்டு கதறினார்.தகவலறிந்ததும் போலீ சார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஜீவா உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் தகராறு இருந்து வந்தது. இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் உறவினர் வீட்டு அருகில் ஜீவா பிள்ளையார் கோயில் ஒன்று கட்டினார். அதன் அருகில் இந்து முன்னணி கொடி கம்பத்தையும் நட்டார். இதுபோல் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது ஊர்வலம் நடந்தது. அப்போது இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி வழியாக விநாயகர் சிலையை கொண்டு செல்ல ஜீவா முயன்றார். இதுபோல் மதப்பிரச்னையில் அவர் அடிக்கடி தலையிட்டு வந்தார். இந்நிலையில்தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.முதல் மனைவி இருக்கும்போது 2ம்திருமணம் செய்த காரணமாக ஜீவா கொலை செய்யப்பட்டாரா அல்லது மத பிரச்னையால் தீர்த்துக்கட்டினார்களா என விசாரணை நடக்கிறது. இந்து முன்னணி மாஜி செயலாளர் கொலையால் சங்கரன்கோவிலில் பதற்றமும் நிலவுகிறது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கொலையான ஜீவா மீது சங்கரன்கோவில் டவுன், தாலுகா ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளன.
நன்றி : நான்கு பெண்கள்
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment