ஞாயிறு, 22 ஜூன் 2014 (12:44 IST) கொச்சி விமான நிலையத்தில் துபாயிலிருந்து 2.4 கிலோ தங்கத்தை ஆசன வாயில் மறைத்து கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தங்கத்திற்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து துபாய், பஹ்ரைன், குவைத் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவிலுள்ள கொச்சி, கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் விமானநிலையங்கள் வழியாக அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்த விமான நிலையங்கள் வழியாக 80 கிலோவுக்கும் அதிகமாக கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. தங்க கடத்தல் அதிகரித்து வருவதை தொடர்ந்து இந்த 3 விமான நிலையங்களிலும் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆனாலும் பல்வேறு நூதன முறைகளைக் கையாண்டு கடத்தல்காரர்கள் தங்களது கைவரிசையைக் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் துபாயிலிருந்து கொச்சி வந்த தனியார் விமானத்தில் ஒரு கும்பல் தங்கத்தைக் கடத்துவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்க இலாகாவினர் தீவிர சோதனை நடத்தினர். இதில் 3 வாலிபர்களின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த சுங்க இலாகாவினர் அவர்களை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
இதில் அவர்களது ஆசன வாயில் தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரின் ஆசன வாயிலிருந்து 2.4 கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட்டுகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதன் மதிப்பு ரூ.80 லட்சமாகும். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்களது பெயர் மற்றும் விவரங்களை சுங்க இலாகாவினர் வெளியிடவில்லை.
Thanks : Tamil Web
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment