பெரியாற்றுபடுகை.... நல்லூர்வாசிகள் ஒவ்வொருவருடைய வாழ்கையிலும் ஏதோ ஒருவிதத்தில் தொடர்புகொண்டிருக்கும் இடமாகும். இந்த பெரியாற்றிற்கு இதுவரை செல்லாதவர்கள் கூட இதன் நீரேற்று நிலையத்தால் கிடைக்கும் நீரை பருகியிருப்பதன் மூலம் இதனுடன் தொடர்பு கொண்டிருப்பர்.
ஒரு நேரத்தில் ஒடுக்கத்து புதன் எனும் நாளை கொண்டாடுவதற்காக பலாச்சோறு ஆக்கிக்கொண்டு குடும்பத்துடன் காலையிலே இங்கு வந்து குளித்துவிட்டு அங்கேயே அமர்ந்து உணவருந்தி, மாலை வரை சுற்றங்களுடன் உறவு பாராட்டிவிட்டு வீடு திரும்புவது 80களிலும் அதற்கு முன்னால் பிறந்தவர்களின் மனங்களில் இன்னும் பசுமையான நினைவுகளாக பதிந்திருக்கிறது.
அழகான பச்சை பசேல் என்ற சூழ்நிலையில் அமைந்திருக்கும் இந்த பெரியாறு படுக்கை கவலை மறந்து ரசிக்கவும், ஆனந்தமாக நீராடவும் மிகச்சிறந்த இடமாகும். வெளிநாட்டில் இருந்து வருபவர்கள், ஏதேனும் ஒரு சந்தோஷமான காரியங்களுக்கு சாப்பாடு வைப்பவர்களுக்கு முதல் தேர்வாக இருப்பது இந்த பெரியாறுதான். காலையிலேயே தள்ளுவண்டியில் கறி மற்றும் சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் பண்டாரியுடன் அனுப்பி வைத்து விட்டு பத்து மணிவாக்கில் சைக்கிளில் இங்கு வந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் வரை ஆற்றில் நடந்து நண்பர்களுடன் சேர்ந்து தெல்கா பறித்து விளையாடிக்கொண்டே குழி தோண்டி குளித்து கூட்டம் போட்டுவிட்டு விட்டு, நல்ல சுள்ளுன்னு பசியுடன் வந்து சாப்பிடும் சுகம் இருகிறதே....... அதை விவரிக்க வார்த்தைகளே கிடையாது. சைக்கிள் மாறி பைக்கில் பறந்தாலும், பெரியாற்று படிக்கையில் வந்து சமைப்பது குறைந்தாலும் இன்னும் அந்த பழக்கம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இப்போதெல்லாம் முந்தைய காலங்களை போல வருடம் முழுவதும் தண்ணீர் வருவதில்லை. இங்குள்ள நீரேற்று நிலையத்தாலும் நல்லூர் முழுவதும் தண்ணீர் தர முடியவில்லை. ஊரின் பெரும்பகுதியில் குடிநீராக இருப்பது தாமிரபரணி தண்ணீர்தான். இருந்தாலும் பெரியாற்று தண்ணிருக்கு இன்னும் தனி மவுசு இருக்கிறது. இன்றும் என்றும் பெரியாறு நமது ஊர்வாசிகளின் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல......
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :



Post a Comment