கடையநல்லூர்: தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ. கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் சதன் திருமலைகுமார் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே 1991ம் ஆண்டு திமுக சார்பில் இத்தொகுதியில் போட்டியிட்டார். அத்துடன் 2006ம் ஆண்டு வாசுதேவநல்லூர் தொகுதியில் மதிமுக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.இந்நிலையில், நேற்று சதன் திருமலைகுமார் கடையநல்லூர் ஒன்றிய, நகர பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் பா.ஜ., தேமுதிக, மதிமுக, பாமக தொண்டர்களும் சென்றனர். சொக்கம்பட்டி, திரிகூடபுரம், கிருஷ்ணாபுரம், முத்துகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அவர், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கடையநல்லூர் பேட்டை ரோட்டில் பிரசாரத்துக்கு சென்றார்.

அப்போது, முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் திரண்டு தங்கள் பகுதிக்குள் சதன் திருமலைகுமார் நுழையக் கூடாது என தடுத்தனர். மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக கோஷமிட்டனர். ராமர் கோயில் கட்டுவோம் என தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு எங்கள் பகுதிக்குள் எப்படி நுழையலாம் என வேட்பாளர் சதன் திருமலைகுமாரிடம் ஆவேசமாக கேட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.இதையடுத்து இளைஞர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்கள் பா.ஜ. கொடியை அகற்றி விட்டு சதன் திருமலைக்குமார் உள்ளே வரலாம் என்று கூறினர். ஆனால் அதற்கு வேட்பாளரும், தேசிய ஜனநாயக கூட்டணியினரும் சம்மதிக்காமல் திரும்பினர். சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் மதிமுக நகர செயலாளர் குமார், பா.ஜ. நகரத்தலைவர் மாரியப்பன், தேமுதிக நகர செயலாளர் சரவணன் ஆகியோர் புகார் செய்தனர். இந்த சம்பவம் கடையநல்லூர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment