பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட சதி: வீடியோ வெளியீடு
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு திட்டமிடப்பட்ட சதிச்செயல் என்று 'கோப்ரா போஸ்ட்' புலனாய்வு இணையதளம் தெரிவித்துள்ளது. இந்த இணையதளம் சார்பில் நடத்தப்பட்ட ரகசிய விசாரணைகளின் மூன்றரை மணி நேரம் ஓடும் வீடியோ தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாபர் மசூதி 1992 டிசம்பர் 6 ஆம் தேதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கை பல ஆண்டுகளாக விசாரித்து வரும் நிலையில், ரகசிய வீடியோ பதிவை டெல்லி பத்திரிகையாளர் மன்றத்தில் கோப்ராபோஸ்டின் ஆசிரியர் அனிரோத் வெளியிட்டுள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக ஓர் ஆய்வு நூல் எழுதுவதாகக் கூறி கோப்ராபோஸ்டின் இணை ஆசிரியரான கே.ஆஷிஷ் , 23 முக்கிய தலைவர்களை பேட்டி எடுத்துள்ளார். இந்த ரகசிய வீடியோ பதிவில் வினய் கட்டியார், உமா பாரதி, கல்யாண்சிங், சுவாமி சச்சிதானந்த் சாக்ஷி மஹராஜ், மஹந்த் ராம்விலாஸ் வேதாந்தி. சாத்வி ரித்தம்பரா, மஹந்த் அவைத்யநாத் மற்றும் சுவாமி நிருத்ய கோபால்தாஸ் மற்றும், பா.ஜ.க., சிவசேனா, வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங்தளம் ஆகியவற்றின் முக்கிய தலைவர்கள் இடம் பெற்றுள்ளதாகத தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 15 பேரை நீதிபதி லிபரான் கமிஷன் குற்றவாளிகள் என்று குறிப்பிட்டுள்ளது. 19 பேர் குற்றவாளிகள் என்று சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது. ‘ஆப்ரேஷன் ஜென்மபூமி’ என்ற பெயரில் நடத்தப்பட்ட சதிச்செயலின் அடித்தளம் வரை சென்று கண்டறிந்த பல உண்மைகளை வெளியிட்டுள்ளதாக 'கோப்ரா போஸ்ட்' தெரிவித்துள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வி.ஹெச்.பி., சிவசேனாவால் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட சதிச் செயல் என்றும், இந்த இரு அமைப்புகளும் தங்களது தொண்டர்களுக்கு பல மாதங்களுக்கு முன்பாகவே பயிற்சி அளித்ததாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் ‘பலிதானி ஜாதா’ எனும் பெயரில் தற்கொலைப்படைகளும் அமைக்கப்படதாகவும் கூறப்பட்டுள்ளளது.
பாபர் மசூதியை இடிக்கத் தொடங்கியவுடன், ராம்விலாஸ் வேதாந்தி தலைமையில் கரசேவகர்கள் எல்.கே.அத்வானி, அசோக் சிங்கால், முரளிமனோகர் ஜோஷி, கிரிராஜ் கிஷோர், ஆச்சார்யார் தர்மேந்தர் உட்பட பலரது முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனர் என்பது தெரிய வந்துள்ளதாகக் அறிவிக்கப்பட்டுள்ளது.
மசூதியை இடிப்பதற்கு ஒருநாள் முன்னதாக அயோத்தியின் இதுதாமில் வி.ஹெச்.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நடத்திய ரகசியக் கூட்டத்தில், அசோக் சிங்கால், வினய் கட்டியார், வி.ஹெச்.டால்மியா, மற்றும் மஹந்த் அவைத்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். ஹனுமன் பாக்கில் நடந்த ரகசிய கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஹெச்.வி.சேஷாத்ரி மற்றும் பாரதிய ஜனதாவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர் என்று கோப்ரா போஸ்ட் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தேர்தல் அமைதியாக நடப்பதை தடுக்கும் விதத்தில் 'கோப்ரா போஸ்ட்' திட்டமிட்டு சதி செய்வதாகவும், இதுதொடர்பான அனைத்துச் செய்திகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க புகார் செய்தது. இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையத்தில் நிராகரித்துள்ளதாக செய்திகள் வெயியாகியுள்ளன.
Courtesy by : Tamil Web
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment