மனைவியை கொன்று வீசியதாக காவல்துறையினரை 5 மணி நேரம் கடும் வெயிலில் அலைய வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
 
திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு நேற்று காலை வாலிபர் ஒருவர் வந்தார். தனது பெயர் வெங்கடேசன் எனவும், கோயம்புத்தூர் சரவணம்பட்டி, சின்னமேட்டுப் பாளையத்தில் வசிப்பதாகவும், மனைவியை கொன்று எழும்பூர் பகுதியில் வீசியதாகவும் தெரிவித்தார்.
 
இதனைக் கேட்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து எழும்பூர் காவல்துறைக்கு உடனடியாக தெரிவித்தனர்.யுண்ட பெண்ணின் உடலை மீட்பதற்காக அடையாளம் காட்டும்படி எழும்பூர் காவல்துறையினர் வெங்கடேசனை காரில் அழைத்துச் செனறனர். போகும் வழியில் உடல் வீசப்பட்ட இடம் சரியாக நினைவில்லை. வருமான வரி அலுவலகம் போர்டு இருந்தது. கூவம் ஆறு ஓடியது. பெரிய பாலம் காணப்பட்டது என்றார்.


இதையடுத்து காவல்துறையினர் அவரை நுங்கம்பாக்கம், எழும்பூர் பகுதிக்கு அழைத்து சென்றனர். சுமார் 5 மணி நேரம் சுற்றியும் மனைவியின் உடலை வீசியதாக கூறிய இடத்தை வெங்கடேசன் காட்டவில்லை.
 
அலைச்சலாலும், வெயிலின் கொடுமையாலும், வெறுத்துபோன காவல்துறையினர் மர நிழலில் காரை நிறுத்தி மீண்டும் வெங்கடேசனிடம் கேட்டனர். அவர் மனைவியை கொன்றதை திரும்ப, திரும்ப தெரிவித்தார்.
 
அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் வெங்கடேசனின் குடும்பம் குறித்து சரவணம்பட்டியில் உள்ள காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விசாரிக்க செய்தனர்.
 
இதன் பிறகு சில நிமிடங்களில் வெங்கடேசனின் ‘விளையாட்டு’ வெளிச்சத்துக்கு வந்தது. அவரது வீட்டில் மனைவி உயிரோடு இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.
 
இதனால் கடுப்பான காவல்துறையினர் வெங்கடேசனை காவல் நிலையம் அழைத்து சென்று முறைப்படி விசாரித்தனர். அப்போது, அவர் மனைவியை கொலை செய்யவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். மனைவியிடம் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கோபத்தில் இவ்வாறு செய்ததாக தெரிவித்தார்.
 
இதையடுத்து அவரை காவல்துறையினர் எச்சரித்து, பொய்யான தகவல் கூறியதாக வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
 
இச்சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Thanks : Tamil Web


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment