திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகே வாக்காளர் பட்டியலில் 800 வாக்காளர்களுக்கு பெயர் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, பின்னர் வாக்குப்பதிவு நடைபெற்றது.
தென்காசி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கடையநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தென்காசி அருகே வல்லம் கிராமத்தில் 59 மற்றும் 60 ஆம் எண் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட வாக்காளர்கள், வாக்குச்சாவடி முகவர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது.
பூத் சிலிப் பெற்ற வாக்காளர்கள் மேற்கண்ட மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்க சென்றனர். சுமார் 800 வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் வாக்காளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பூத் சிலிப் வழங்கப்பட்டிருந்த போதிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் வல்லம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
வாக்குப்பதிவு மையங்களுக்கு பழைய வாக்காளர் பட்டியலில் வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. புதிய வாக்காளர் பட்டியல் படி வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்ட நிலையில் பழைய வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் இல்லாத காரணத்தால் குழப்பம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தென்காசி ஏ.எஸ்.பி. அரவிந்தன் தலைமையில் போலீஸார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் அய்யாத்துரை பாண்டியன், கட்சியின் முகவர் குமரேசன் உள்ளிட்ட தொகுதி தேர்தல் அலுவலர் பி. உமாமகேஷ்வரியை சந்தித்து மேற்கண்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இயந்திரம் பழுது: தென்காசியில் காட்டுபாவா பள்ளி வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக 45 நிமிடம் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது சரி செய்யபட்டதை தொடர்ந்து அங்கு தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment