பெண் இன்ஜினியர் கொல்லப்பட்ட வழக்கில் மேற்கு வங்கத்துக்கு ஓடிய மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை செய்தது எப்படி என்று அவர்கள் நடித்துக்காட்டினர். இதுபற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை அருகே சிறுசேரி சிப்காட்டில் உள்ள டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் உமாமகேஸ்வரி (23). இவர், கடந்த 13ம் தேதி இரவு மாயமானார்.
இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 22ம் தேதி சிறுசேரி சிப்காட் வளாகம் அருகே புதரில் அழுகிய நிலையில் உமாமகேஸ்வரியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரிந்தது. சிபிசிஐடி ஐஜி மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் எஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர். உமாமகேஸ்வரிக்கு சொந்தமான 2 செல்போனில் பதிவாகியிருந்த 800 நம்பர்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவரது செல்போனில் வேறு சிம்கார்டு போடப்பட்டு அதற்கு கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு கடையில் ரூ.20க்கு ரீசார்ஜ் செய்திருப்பது தெரியவந்தது.
அப்போது தன்னுடன் வேலை பார்க்கும் ராம் மண்டல் (24) மேலும் 2 பேருடன் சேர்ந்து உமா மகேஸ்வரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து உத்தம் மண்டல், ராம் மண்டலை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின் அவர்களை கிண்டியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்துள்ள திடுக்கிடும் தகவல்கள்: கொலையில் தொடர்புடைய 4 பேரும் சிப்காட் வளாகத்தில் கட்டிட வேலை செய்துள்ளனர். வேலை முடிந்ததும் தினமும் குடித்துவிட்டு சிப்காட் வழியாக அவர்கள் தங்கியுள்ள இடத்துக்கு நடந்து செல்வார்கள். ஒரு மாதத்துக்கு முன் உமா மகேஸ்வரி தனியாக நடந்து செல்லும்போது, அவரை கிண்டல் செய்து, சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் செருப்பை கழற்றி வாலிபர் ஒருவரின் கன்னத்தில் அடித்துள்ளார். இதை பொதுமக்கள் சிலர் பார்த்திருக்கிறார்கள். இதனால் அவமானம் அடைந்த 4 பேரும் கோபத்தில் இருந்தார்கள். உமா மகேஸ்வரியை பழிவாங்க முடிவு செய்தனர்.
கடந்த 13ம் தேதி இரவு உமாமகேஸ்வரி தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த உத்தம் மண்டல், ராம் மண்டல் மற்றும் அவரது 2 நண்பர்கள் சேர்ந்து உமாமகேஸ்வரியின் வாயை மூடி புதருக்குள் தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு அவரை 4 பேரும் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது ஒரு வாலிபரின் முகத்தில் உமா மகேஸ்வரி துப்பினார். ஆத்திரமடைந்த அவர்கள், கத்தியை எடுத்து உமா மகேஸ்வரியை சரமாரியாக வயிற்றில் குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். உடனே அவரது ஹேண்ட் பேக்கில் இருந்த ஏடிஎம், கிரெடிட் கார்டு, செல்போனை எடுத்துக்கொண்டு நான்கு பேரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். அந்த ஏடிஎம் கார்டின் பின்பகுதியில் பின் நம்பரை உமா மகேஸ்வரி எழுதி வைத்திருந்தார். அதை வைத்து அவர்கள் பணம் எடுத்துள்ளனர். இவ்வாறு போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 2 வாலிபர்கள் மேற்கு வங்கத்துக்கு தப்பினர்.
அவர்களை பிடிக்க சிபிசிஐடி தனிப்படை போலீசார், மேற்கு வங்கம் சென்றனர். அங்கு மால்டாவில் கொலையாளிகள் இருவரையும் நேற்று காலை கைது செய்தனர். அவர்களை அங்குள்ள கோர்ட¢டில் ஆஜர்படுத்தி சென்னை கொண்டு வர உள்ளனர். முன்னதாக, ஐஜி மஞ்சுநாதா முன்னிலையில், கைது செய்யப்பட்ட உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகியோர் கேளம்பாக்கம் காவல் நிலையம் கொண்டு வரப்பட்டனர். கேளம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மூலம் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், அவர்களின் கைரேகை, புகைப்படம் எடுத்து பதிவு செய்தனர். இதை தொடர்ந்து போலீஸ் வாகனத்தில், கைதானவர்களை கொலை நடந்த இடத்துக்கு அழைத்து சென்றனர். அவர்கள் உமா மகேஸ்வரியை கொலை செய்தது எப்படி என்று போலீசார் முன்னிலையில் நடித்து காட்டினர்.
குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி
படுகொலை செய்யப்பட்ட இன்ஜினியர் உமா மகேஸ்வரியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து அவரது குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி
சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி தலைமையில் டிஎஸ்பிக்கள் வீரமணி, ரவிக்குமார் உள்பட 10 இன்ஸ்பெக்டர்கள், 5 போலீசார் கொண்ட தனிப்படையினர் நேற்று மாலை 5 மணியளவில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில், உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகியோரை ஆஜர்படுத்தினர். அவர்களை முதலாவது குற்றவியல் நீதிபதி அங்காளீஸ்வரி மார்ச் 12ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். போலீசார் உங்களை துன்புறுத்தினார்களா என நீதிபதி கேட்டபோது, ராம் மண்டல், தன் கை, கால்களை கட்டி தொங்கவிட்டு, போலீசார் அடித்ததாக கூறினார். மேலும் காலில் ஏற்பட்ட காயத்தை காட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. குற்றம்சாட்டப்பட்டுள்ள 2 பேரையும் 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி டிஎஸ்பி வீரமணி மனு செய்தார். ஆனால் 7 நாள் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். மீண்டும் 4ம் தேதி கோர்ட்டில் ஆஜர் செய்ய உத்தரவிட்டார்.
மொழி தெரியாததால் போலீசார் திணறல்
கைது செய்யப்பட்ட உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகியோரை நேற்று மாலை 3.40 மணி வரை கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அவர்கள் இந்தி ஓரளவு மட்டுமே பேசினர். வங்க மொழியை சரளமாக பேசினர். இதனால், அவர்களிடம் போலீசார் விசாரிப்பதில் சிரமம் அடைந்தனர்.
இதையடுத்து கேளம்பாக்கம் அடுத்த சாத்தன்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து வங்க மொழி தெரிந்த ஒரு ஆசிரியையை அழைத்து வந்து, அவர்களிடம் விசாரித்தனர். அவர் மொழிபெயர்த்து கூறினார். இதையடுத்து அவர்கள் கூறியதை போலீசார் பதிவு செய்தனர்.
உமாமகேஸ்வரியின் கடைசி நிமிடங்கள்
13ம் தேதி இரவு 10.15 மணிக்கு உமாமகேஸ்வரி, கம்பெனியில் இருந்து வெளியே வந்தார். 10.18 மணிக்கு அவருடன் அறையில் தங்கியுள்ள நதியா என்ற தோழிக்கு போன் செய்து, தனக்கு பசிப்பதாகவும், உணவு தயாரித்து வைக்கும்படியும் கூறியுள்ளார். இதுவே அவரது கடைசி செல்போன் பேச்சு. உமா மகேஸ்வரிக்கு அலுவலகத்தில் அதிக வேலை பளு இருந்ததால், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால், அவரது பிராஜக்டை முடிக்க முடியாமல் இருந்துள்ளார். இதுகுறித்து ஒரு வாரத்துக்கு முன்பு, தனது பெற்றோருக்கு போன் செய்து கூறியுள்ளார்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment