புதுடெல்லி: இந்தியாவில் 14 வயதுக்கு மேலான முஸ்லிம் மாணவிகளின் திறமைகளை வளர்க்கும் நோக்கில் மத்திய அரசு ரூ. 978 கோடி மதிப்பிலான திட்டத்தை தயாராக்கியுள்ளது. திறமை என்ற பொருள்படும் HUNAR என்று பெயரிடப்பட்டிருக்கும் இத்திட்டம் குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

2014-17 காலக்கட்டத்தில் இத்திட்டம் மூலம் 9.7 லட்சம் மாணவிகள் பலன் அடைவர். அஸ்ஸாம், ஆந்திர பிரதேசம், பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சார்ந்த 50 ஆயிரம் மாணவிகளுக்கு முதல் கட்டமாக இத்திட்டம் மூலம் பலன் கிடைக்கும்.
ஒவ்வொரு மாணவிக்கும் 6 மாத தொழில் பயிற்சி வழங்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அழகுக் கலை, தையல், எம்ப்ராய்டரி, டைப்பிங், கம்ப்யூட்டர் ஆகியவற்றில் முதல் கட்டமாக பயிற்சி வழங்கப்படும்.
சமுதாயத்தின் விருப்பத்தின் அடிப்படையில் கூடுதல் பயிற்சிகள் பின்னர் சேர்க்கப்படும். முஸ்லிம்களில் உள்ள கைம்பெண்கள் மற்றும் அகதிகளுக்கும் இப்பயிற்சி வழங்கப்படும். பள்ளிக்கூடங்களில் இருந்து பாதியில் படிப்பை விட்டுச் செல்லும் மாணவர்களுக்கு கல்வியை தொடருவதற்கான சிறப்பு திட்டமும் இதில் அடங்கும்.

மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களுடைய திறமைகளை வளர்த்துவதே நோக்கமாகும். முன்னர் இது போன்றதொரு திட்டம் பீகார், டெல்லி மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டது. பீகாரில் 13 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
இது பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து நாடு முழுவதும் அமல் படுத்த சிறுபான்மை கல்விக்கான நிலைக்குழு சிபாரிசு செய்தது. இதன் அடிப்படையில் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் இம்முடிவை எடுத்துள்ளது. பள்ளிக்கூடங்களில் இருந்து பாதியில் படிப்பை விட்டுச் செல்லும் மாணவிகளில் பெரும்பாலோர் முஸ்லிம் மாணவிகள் என்று மனித வள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment