குமாரபாளையம்: "நடப்பு நிதி ஆண்டில், 2.24 லட்சம் இளைஞர்களுக்கு, தொழிற்பயிற்சி வழங்க 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என முகாமில், தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி பேசினார்.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் சார்பில், இளைஞர்களுக்கான தொழில் திறன் பயிற்சி முகாம் துவக்க விழா, குமாரபாளையத்தில் நடந்தது. தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி, இளைஞர்களுக்கு பயிற்சி ஆணை வழங்கி பேசியதாவது:
தமிழகம், அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காணும் வகையில், தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். தொழில் துறையில், இளைஞர்கள் இலவசமாக தொழில் பயிற்சி பெற்று, வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, 2013-14ம் நிதியாண்டில், 18 துறைகளில், 2.24 லட்சம் இளைஞர்களுக்கு, தொழிற்பயிற்சி வழங்க, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்துள்ள, ஒரு லட்சத்து, 92 ஆயிரத்து, 676 பேரில், நடப்பு ஆண்டில், அரசு வேலை பெற்றவர்கள், 522 பேர். ஒன்பது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், 497 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
குமாரபாளையம், திருச்செங்கோடு போன்ற பகுதிகளில் உள்ளவர்கள், தொழிற்பயிற்சி பெறவேண்டும் என்பதற்காக, பத்து லட்சம் ரூபாய், அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அவற்றை பயன்படுத்தி, இளைஞர்கள், வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment