மதுரையில் இருந்து பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் சேத்தலைக்கு நேற்றிரவு லாரி சென்றது. லாரியை மதுரை பேரையூரை சேர்ந்த வடிவேல் (வயது 35) ஓட்டினார். அவருடன் கிளீனரும் வந்தார்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் சொக்கம்பட்டி தண்ணீர்பந்தல் அருகே உள்ள குறுகிய பாலத்தில் செல்லும் போது திடீரென லாரி நிலைதடுமாறி பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு, அங்குள்ள ஓடைக்குள் கவிழ்ந்தது. 

இதில் டிரைவரும், கிளீனரும் லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் சொக்கம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் லாரியை மீட்பதற்கான பணியில் ஈடுபட்டனர்.

கடையநல்லூர் சொக்கம்பட்டி தண்ணீர்பந்தல் பாலம் மிகவும் குறுகலானது. அதன் வழியாக ஒரே நேரத்தில் 2 வாகனங்கள் செல்ல முடியாது. மேலும் அந்த பாலத்தின் ஒரு பகுதி தடுப்பு சுவர் உடைந்து காணப்பட்டது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உண்டானது.

எனவே குறுகலான பாலத்தை விரிவுப்படுத்த வேண்டும் மற்றும் பாலத்தின் தடுப்பு சுவரை கட்ட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து மாலைமலரில் கடந்த 7–ந்தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்பு சுவரை கட்டுவதற்கும், பாலத்தை விரிவுபடுத்துவதற்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இந்நிலையில் நேற்றிரவு அந்த பாலம் வழியாக சென்ற லாரி விபத்துக்குள்ளாகி ஓடையில் கவிழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment