நேற்று என் மகளின் ஆசிரியர்களுக்கு Teachers day பரிசு கொடுப்பதற்காக பரிசு வாங்குவதற்கு சென்றிருந்தேன். காலங்களை சற்று பின்னோக்கி பார்க்கின்றேன்.எனக்கு கற்று தந்த ஆசிரியர்களுக்கு நான் என்ன பரிசு கொடுத்திருக்கிறேன்? வெறும் பேனாவையும்,பொம்மையும் கொடுப்பதால் அவர்களின் சேவைக்கு ஈடாகிவிடுமா? ஒரு முறை ஆசிரியருக்கு பரிசு ஒன்று வாங்கி சென்றேன்,அவர் அதை வாங்க மறுத்து திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.

நீங்கள் எதாவது எனக்கு பரிசு தர ஆசைப்பட்டால்,உங்கள் ரேங் கார்ட்ல்
ரேங் காலத்தில் ஒன்று என இருக்க வேண்டும்.அதுவே நீங்கள் எனக்கு தரும் பரிசு என்றார்.அது போன்ற அற்புதமான ஆசிரியர்களை நினைத்து பார்க்கும் தருணம் இது.
எங்கள் மீது எந்த வித சுமையும் ஏற்றாத அழகிய பாடங்கள் அன்று இருந்தன.எங்கள் வகுப்புகளையும் நாங்கள் அதிகம் நேசித்தோம்.
வாஸ்கோடகாமா எதுக்கு இந்தியா வந்தார்? அப்படி ஒரு கேள்விக்கு நண்பன் ஒருவன் "தள்ளாடும் வயதில் ஆத்தமட்டாமல்(வேலையில்லமல்) வந்தார் என சமூக அறிவியல் ஆசிரியரிம் பதில் சொல்ல அன்று வகுப்பறையே கலகலத்தது.

லூயிஸின் உள்நாட்டு கொள்கை மற்றும் அயல் நாட்டு கொள்கை பாடத்தை கூட மிக எளிதாக புரிய வைத்த ஆசிரியர்களும் உண்டு.

சில நேரங்களில் பாடலோடு வகுப்புகள் நடக்கும்,"முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ,
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ" இது போன்ற பாடல்கள் இல்லாமல் பரமசிவம் சாரின் தமிழ் வகுப்புகள் இருக்காது.
"குனித்த புருவமும் கோவைச்செவ்வாயில்" செய்யுள் பாடல் மனசுல பதியமாட்டுக்கு சார்.

அப்படியா இந்த அரையாண்டு பரீட்சையில இந்த கேள்வி வரும்,நீ என்ன பண்ணு தளபதி படத்துல வர்ற ராக்கம்மா கைய தட்டு பாட்ட மனம் பாடம் பண்ணினால் இந்த செய்யுள் பாட்டு தானா மனப்பாடம் ஆகிவிடும்.
ஆசிரியர்கள் கற்றுத்தரும் எளிய முறை மனப்பாடங்களில் இதுவும் ஒன்று.

ஹாஜா மைதீன் சார் சமூக அறிவியல் வகுப்பு இன்னும் களை கட்டும்,சார் இங்க இருந்து இலங்கை எவ்வளவு நேரம் ஆகும்? என்ன தூத்துக்குடி யில் இருந்து ஒரு மணி நேரம் ஆகும்.

சார் ஆனா மேப்ல ரொம்ப பக்கமா இருக்கசார்? அதுக்காக ஓடி வந்து தாண்டவா முடியும்? படகுல அல்லது விமானத்துல தானடே போகனும்
இது போல எத்தனையோ சுவராசியங்கள் ஒவ்வொரு நாளும்
ஓடிக்கொண்டிருக்கும் வகுப்பறையில்.

மாணவர் சங்கங்கள் வைத்து மாணவர்களின் திறமையை மேம்படுத்துதலும் உண்டு, மாதம் ஒரு முறை நடக்கும் மாணவர் சங்கங்களின் நிகழ்ச்சிகள் பொழுது போக்காக மட்டும் அல்லாமல் மாணவர்களுக்கு மேடை ஏறி பேசும் தைரியத்தையும்
மனப்பக்குவத்தையும் வளர்த்ததில்
எங்கள் ஆசிரியர்களுக்கு பெரும் பங்கு உண்டு.

பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி என
அழைத்து போட்டிகளிலும் பங்கு பெற
ஆர்வமூட்டியவர்கள் எங்கள் ஆசிரியர் கள்...

எல்லா மாணவர்களையும் சமமாக பாவித்து ,எல்லோரையும் நல்ல மதிப்பெண்கள் எடுக்கவைக்க வேண்டும் என்று தன்னலமற்று உழைக்கும் எத்தனையோ ஆசிரியர்கள் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.அவர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைக்காவிட்டாலும் அவர்கள் எங்களுக்கு எப்போதும் நல்லாசியர்களாகவே இருக்கிறார்கள்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment