கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்ட பெண் இறந்ததால், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முத்துகிருஷ்ணாபுரம் தெற்குவிளை தெருவைச் சேர்ந்த குமாரின் மனைவி சத்யா (25).
தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைபெற்ற இவர் ஞாயிற்றுக்கிழமை கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டாராம்.
ஆனால் அப்போது அங்கு மருத்துவர்கள் பணியில் இல்லையாம். இந்நிலையில் அப்பெண் மருத்துவமனையில் இறந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் சத்யாவின் சடலத்தை வீட்டுக்கு கொண்டு சென்றார்களாம்.
இதற்கிடையே கடையநல்லூர் காவல் நிலையத்துக்கு தொலைபேசியில் பேசிய மர்மநபர் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் பெண் இறந்த விவரத்தை தெரிவித்தாராம். இதையடுத்து கடையநல்லூர் போலீஸார் சத்யாவின் வீட்டுக்குச் சென்று அவரின் சடலத்தை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு மீண்டும் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால்தான் சத்யா இறந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் தென்காசி-மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரைமணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த புளியங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் வானுமாமலை, கடையநல்லூர் காவல் ஆய்வாளர் சபாபதி, தென்காசி வட்டாட்சியர் சொர்ணராஜ் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் மறியலைக் கைவிட்டனர்.
இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் கடையநல்லூர் அரசு மருத்துவமனையின் கதவைப் பூட்டினராம். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து வாசல் திறக்கப்பட்டது.
இதற்கிடையே அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட சத்யா இறந்த நிலையிலேயே வந்ததாகவும், பணியிலிருந்த மருத்துவர் அவரை பரிசோதிப்பதற்கு முன்னதாகவே, உறவினர்கள் அவரது சடலத்தை எடுத்துச் சென்று விட்டதாகவும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், மருத்துவமனையைப் பூட்டியது பெரிய குற்றம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment