இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
தோட்டக்கிணற்றில் பிணங்கள்
சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் சரகத்திற்குட்பட்ட பெரிய கொல்லப்பட்டியில் ஜெயச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அவர் தனது தோட்ட நிலத்தில் சோளப்பயிர் மற்றும் பூந்தோட்டம் அமைத்துள்ளார். காலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஜெயச்சந்திரன் சென்றார்.
அப்போது, தோட்டக்கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. அதைத்தொடர்ந்து கிணற்றை எட்டிப்பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அங்கு ஒரு ஆணும், பெண்ணும் பிணமாக மிதந்தனர்.
பிணங்கள் மீட்பு
உடனடியாக கன்னங்குறிச்சி போலீசாருக்கு, செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன், சப்–இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், பாபு, மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். செவ்வாய்பேட்டை நிலைய அலுவலர் வெங்டாசலம் தலைமையில் தீயணைப்பு துறையினரும் விரைந்து சென்றனர். 75 அடி ஆழ கிணற்றில் 30 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தது.
கிணற்றில் மிதந்து கொண்டிருந்த இருவரது உடலையும் தீயணைப்பு படையினர் கயிறுகட்டி மீட்டனர். பின்னர் இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், கிணற்றில் பிணமாக கிடந்தது கள்ளக்காதல் ஜோடி என்பதும், அவர்களது பெயர் வினோத், ஜெயா என்பதும் தெரியவந்தது. அவர்கள் கடந்த 10–ந் தேதியன்றே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதனால் அவர்களது உடல்கள் அழுகி நாற்றம் எடுத்தது.
கள்ளக்காதல் ஜோடி
சேலம் அய்யந்திருமாளிகை மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மாது(வயது35). இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயா(25) என்ற பெண்னை திருமணம் செய்தார். இவர்களுக்கு திருமூர்த்தி(7). அம்பிகா(5) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் ஜெயாவிற்கும், கடந்த 5 மாதத்திற்கு முன்பு சேலம் டவுன் பகுதியில் இருந்து அய்யந்திருமாளிகைக்கு குடியேறிய கட்டிட தொழிலாளியான வினோத்(23) என்ற வாலிபருடன் இடையே பழக்கம் ஏற்பட்டது. வினோத்திற்கு திருமணம் ஆகவில்லை. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இவர்கள் கள்ளக்காதல் விவகாரம் இருதரப்பு உறவினருக்கும் தெரியவரவே, இருவரையும் கண்டித்ததாக கூறப்படுகிறது. கடந்த 10–ந்தேதி மாது வீட்டில் இருக்கும் போது, அவரது மனைவி ஜெயா, தனது கள்ளக்காதலன் வினோத்திடம் செல்போனில் சிரித்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாது ஜெயாவை கண்டித்தாக கூறப்படுகிறது.
தற்கொலை
இதனால் கணவன் மாதுவிடம் கோபித்துக்கொண்டு ஜெயா வெளியேறினார். பின்னர் வினோத்துடன் எங்கோ சென்று விட்டார். இந்த நிலையில் ஜெயாவை அவரது கணவர் மாதுவும், வினோத்தை அவரது பெற்றோரும் தேடினர். இருவரையும் கண்டு பிடிக்க முடியாததால், வினோத்–ஜெயா இருவரும் வீட்டைவிட்டு ஓடிவிட்டதாக கருதினர்.
வினோத்தும், ஜெயாவும் பல இடங்களில் சுற்றித்திரிந்து விட்டு, இரவு கன்னங்குறிச்சியிலிருந்து கோரிமேடு செல்லும் வழியில் உள்ள ஜெயச்சந்திரன் விவசாயக்கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
‘உறவு புனிதமானது‘ என கடிதம்
வினோத்–ஜெயா தற்கொலை செய்துக்கொண்ட கிணற்றின் அருகில் உள்ள மோட்டார் அறை பக்கத்தில் செருப்புகள் கிடந்தன. அவற்றின் அடியில் ஒரு கடிதம் எழுதி மடித்து வைக்கப்பட்டிருந்தது.
அதில்,‘‘எங்கள் உறவு புனிதமானது. எங்களை எந்த சக்தியாலும் பிரிக்கமுடியாது. நாங்கள் 5 மாதம் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை எங்களுக்கு முழுதிருப்தி அளிப்பதினால் நாங்கள் தற்கொலை செய்துகொள்கிறோம். இதனால் நாங்கள் ஒன்றாகவே சாகிறோம். எங்கள் உடல்களை ஒன்றாகவே அடக்கம் செய்யுங்கள்‘‘ என்று எழுதப்பட்டிருந்தது. கள்ளக்காதல் ஜோடி தற்கொலை குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment