கடையநல்லூர் அருகே உள்ள திருவேட்டநல்லூர் மாடசாமிகோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 41), விவசாயியான இவர் மீது கடையநல்லூர், சொக்கம்பட்டி, மடத்துப்பட்டி ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது.
இந்நிலையில் இன்று காலை சண்முகசுந்தரம் திருவேட்டநல்லூர் அய்யனார் கோவில் அருகே வெட்டி கொலைப்பட்டு கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் புளியங்குடி டி.எஸ்.பி. வானுமாமலை, சொக்கம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அய்யப்பன், சப்–இன்ஸ்பெக்டர் முத்தையா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சண்முகசுந்தரத்தை வெட்டிக்கொலை செய்தவர்கள் யார்?, எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று தெரியவில்லை. அவரது கொலையில் அப்பகுதியை சேர்ந்த வக்கீலுக்கு தொடர்பு இருக்கலாமா? என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சண்முகசுந்தரமும் அந்த பகுதியை சேர்ந்த வக்கீல் முத்துதுரை (38) என்பவரும் நண்பர்கள். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சண்முகசுந்தரம் , முத்துதுரை பெயரில் கார் ஒன்றை வாங்கியுள்ளார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அந்த கார் விற்க வேண்டும்என்று முத்துதுரையிடம் சண்முகசுந்தரம் கூறியுள்ளார். ஆனால் அவர் விற்கக்கூடாது என்று கூறிவிட்டார். இது தொடர்பாக அவர்களுக்குள்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இது தொடர்பாக 2 பேர்மீதும் சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோர்ட்டிலும் வழக்கு நடந்து வருகிறது. இந்த பிரச்சினை காரணமாக முத்துதுரை மற்றும் அவரது கார் டிரைவர் உதயகுமார் ஆகியோர் சேர்ந்து சண்முகசுந்தரத்தை கொலை செய்திருக்கலாமா? என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment