காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து பின்னர் மற்ற கட்சிகளுக்கு கைமாறிய தொகுதி என்று தென்காசி (தனி) தொகுதியை கூறலாம்.
முன்னாள் மத்திய மந்திரி அருணாசலம் (காங்கிரஸ்) பலமுறை தென்காசி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். கடைசியாக நடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களிலும் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
தென்காசி பாராளுமன்ற தொகுதியில், சங்கரன்கோவில் (தனி), கடையநல்லூர், அம்பாசமுத்திரம், வாசுதேவநல்லூர் (தனி), தென்காசி, ஆலங்குளம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்று இருந்தன.
தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு ஆலங்குளம், அம்பாசமுத்திரம் ஆகிய 2 தொகுதிகள் நீக்கப்பட்டன. அவற்றுக்கு பதிலாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) ஆகிய 2 தொகுதிகள் சேர்க்கப்பட்டன.
பெண் வாக்காளர்கள் அதிகம்
கடந்த 2009–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது மொத்தம் 10 லட்சத்து 51 ஆயிரத்து 89 வாக்காளர்கள் இருந்தனர்.
தற்போதைய மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 49 ஆயிரத்து 754. அதில் 6 லட்சத்து 73 ஆயிரத்து 136 பேர் ஆண்கள். 6 லட்சத்து 76 ஆயிரத்து 618 பேர் பெண்கள். புதிய வாக்காளர்கள் சுமார் 3 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். புதிய வாக்காளர்களின் ஓட்டுகள் தென்காசி தொகுதியில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
தென்காசி தொகுதியில் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். நாடார், தேவர், பிள்ளைமார் சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர். தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர். பிராமணர் மற்றும் இதர சமுதாயத்தினரும் ஓரளவு உள்ளனர்.
1952 முதல் 2004 வரை நடந்த பொதுத்தேர்தல்களில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்கள்தான், தென்காசி தொகுதியின் வெற்றியை தீர்மானித்தார்கள். 2009–ம் ஆண்டுக்கு பின்பு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்களும் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கின்றனர்.
உள்ளூர் பிரச்சினைகளை நிறைவேற்றும் கட்சிக்கே ஓட்டு. இதுதான் தென்காசி மக்களின் எதிர்பார்ப்பு. தென்காசி தொகுதி மக்களின் முதன்மை தொழில் விவசாயம். அதற்கு அடுத்தபடியாக பீடிசுற்றும் தொழிலை கூறலாம்.
விவசாயம், பீடித்தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய வாக்குறுதிகளை அரசியல் கட்சியினர் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
தனி மாவட்டம் 
தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும். தென்காசி நகரில் போக்குவரத்து நெருக்கடி அதிகம் உள்ளது. குற்றாலத்துக்கு சுற்றுலா வருகிறவர்கள் தென்காசி நகருக்குள் வந்து செல்வதால், இன்னும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. எனவே தென்காசி ஆசாத்நகரில் இருந்து ‘ரிங்ரோடு’ அமைக்கும் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்பது தென்காசி மக்களின் நீண்டநாள் கோரிக்கை.
செங்கோட்டை– புனலூர் அகல ரெயில் பாதை பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
சிவகிரி தாலுகா மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள செண்பகவல்லி அணைக்கட்டு சேதம் அடைந்துவிட்டது. அதை சரி செய்ய வேண்டும் என்பது அந்த பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும்.
சங்கரன்கோவில், ராஜபாளையம் சட்டசபை தொகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம், மின்வெட்டு, மூலப்பொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று விசைத்தறி தொழிலாளர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். புளியங்குடி பகுதியில் எலுமிச்சை சாகுபடியும், சங்கரன்கோவில் பகுதியில் மலர் சாகுபடியும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. எனவே அங்கு விவசாயத்தை மேம்படுத்தும் திட்டங்களை வாக்குறுதிகளாக கட்சியினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் அதிக வெற்றி
தென்காசி தொகுதியில் 1957, 1962, 1967–ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. அதன் பின்னர் 1971–ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியிலும், 1977–ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியிலும், 1980–ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியிலும் 1984, 1989, 1991 ஆகிய தேர்தல்களில் அ.தி.மு.க. கூட்டணியிலும் இடம் பெற்று, காங்கிரஸ் வெற்றி கண்டது.
1996–ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா.) வேட்பாளர் வெற்றி பெற்றார். 1998, 1999 ஆகிய தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 2004–ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற இந்திய கம்யூனிஸ்டு வெற்றி பெற்றது.
2009–ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று இருந்த இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் லிங்கம் 2 லட்சத்து 81 ஆயிரத்து 174 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெள்ளைபாண்டி 2 லட்சத்து 46 ஆயிரத்து 497 ஓட்டுகள் பெற்று 2–வது இடத்தை பிடித்தார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 1 லட்சத்து 16 ஆயிரத்து 685 ஓட்டுகள் பெற்று 3–வது இடத்தை பிடித்தார்.





உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment