தென்காசி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தனித் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகள் சங்கீதா களம் இறக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தொகுதி சீரமைப்பில் தற்போது தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், திருவில்லிப்புத்தூர் என்று ஆறு தொகுதிகள் உள்ளது.

இதில் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், திருவில்லிப்புத்தூர் என்ற மூன்று தொகுதிகளும் தனித் தொகுதிகள். இந்த ஆறு தொகுதிகளிலுமே அதிமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளுமே வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தனித் தொகுதியான தென்காசியில், தலித் 23 சதவீதமும், தேவர் 17 சதவீதமும், நாடார் 12 சதவீதமும் உள்ளனனர். மேலும், தென்காசி, கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் அதிக அளவில் உள்ளது. கிறிஸ்தவ வாக்குகள் பரவலாக உள்ளது.

திமுக கூட்டணியில் தென்காசி தொகுதி எங்களுக்குத் தான் வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி பிடிவாதம் பிடித்து வருகின்றது. மேலும், தேர்தல் வேலைகளில் பரபரப்பு காட்டி வருகின்றனர். கூட்டணி உடன்பாடு அறிவிக்கப்படும் முன்பே புதிய தமிழகம் சார்பில் அங்கு தேர்தல் வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

1998ம் ஆண்டு நடந்த தேர்தலில் டாக்டர் கிருஷ்ணசாமி 1.40 லட்சம் வாக்குகள் பெற்றார். அடுத்து 1999ம் ஆண்டு நடந்த தேர்தலில் த.மா.கா. வுடன் இணைந்து 1.86 லட்சம் வாக்குகள் பெற்றார். மேலும், 2004ம் ஆண்டு தேர்தலின் போது 1.11 லட்சம் வாக்குகள் பெற்றார். இறுதியாக கடந்த தேர்தலிலும் 1.16 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார்.

இந்த முறை திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இருப்பதால், தென்காசி தொகுதியில் எளிதாக வெற்றி பெறலாம் என்று நம்பிக்கையுடன் சொல்கின்றனர் புதிய தமிழகம் கட்சி முன்னணி நிர்வாகிகள்.

வரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தென்காசி தொகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி. கடந்த டிசம்பர் 15ம் தேதி தென்காசியில் கட்சியின் 17வது ஆண்டு விழாவை முன்னிட்டு பொது மக்கள் பலருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளார்.

மேலும், காலியாக உள்ள சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவிக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் என்று போராட்டமும் நடத்தி மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த நிலையில் தான் ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள டாக்டர் கிருஷ்ணசாமி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
தனக்கு பதில் தனது மகள் டாக்டர் சங்கீதாவை தென்காசி தொகுதியில் களம் இறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதியவர்களுக்கும், கட்சியில் உள்ள முன்னணி நிர்வாகிகளுக்கும் வாய்ப்பு கொடுத்தால் அவர்கள் முக்கிய தருணங்களில் கட்சி தலைமையுடன் மோதல் போக்கை கடைபிடித்து மாற்று முகாமிற்கு தாவிவிடுவதாகவும் அதனால் இம்முறை வெளியாட்களுக்கு சீட் இல்லை என்றும், தனது மகளை களம் இறக்க டாக்டர் கிருஷ்ணசாமி முடிவு செய்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. இந்த தகவலை புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் சிலரும் உறுதி செய்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment