சென்னையை அடுத்த பரங்கிமலை ஜி.எஸ்.டி. சாலையில் ராணுவ குடியிருப்பு பகுதியில் பழமையான ஹசரத் சாலிமஸ்தான் தர்கா உள்ளது. இந்த தர்கா வளாகத்தில் குடிசை அமைத்து தொழுகை நடந்து வந்தது. தர்கா கமிட்டி சார்பில் தொழுகை நடந்த இடத்தில் புதிதாக மசூதி கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இங்கு கட்டிடம் கட்டக்கூடாது என கூறி ராணுவ அதிகாரிகள் தடுக்க முயன்றார்.
அதற்கு தர்கா கமிட்டி சார்பில் கட்டிடம் கட்ட கண்டோன்மெண்ட் போர்டிடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆனால் தர்கா கமிட்டி வைத்து இருந்த ஆவணம் போலியானது என கண்டோன்மெண்ட் நிர்வாகம் சார்பில் பரங்கிமலை போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து நேற்று அதிகாலை ராணுவ அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை இடித்து தள்ளினார்கள். இதற்கு அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ராணுவ அதிகாரிகள் திரும்பிச் சென்றுவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் த.மு.மு.க. மாவட்ட தலைவர் யாகூப், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் பிலால், இந்திய தவ்த் ஜமாத் மாநில செயலாளர் சித்திக், த.மு.மு.க. நகர தலைவர் ஜாகீர், எஸ்.டி.பி.ஐ. நகர தலைவர் சமது உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு குவித்தனர். தர்கா கட்டிடம் இடிக்கப்பட்டதை கண்டித்து கோஷங் களை எழுப்பினார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தென்சென்னை இணை கமிஷனர் திருஞானம், பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர்கள் முருகேசன், முகமது அஸ்லாம், ஆரோக்கியம் உள்பட நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.

அப்போது இணை கமிஷனர் திருஞானம், அங்கிருந்தவர்களிடம், “இதுபற்றி கண்டோன்மெண்ட் நிர்வாகம், தாசில்தார், சமுதாய அமைப்புகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் இடிக்கப்பட்ட பகுதியில் மதியம் தொழுகை நடத்தப்பட்டது.
பின்னர் பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் கண்டோன்மெண்ட் போர்டு நிர்வாக அதிகாரி எஸ்.பிரபாகரன், தாசில்தார் கேசவலு மற்றும் சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தர்கா உள்ள இடம் கண்டோன்மெண்ட் நிர்வாகத்தின் கீழ் வருவதாக கூறப்பட்டது. இதையடுத்து இதுபற்றிய ஆவணங்களை சரிபார்த்து நடவடிக்கை எடுக்க திங்கட்கிழமை வரை அவகாசம் வேண்டும் என கண்டோன்மெண்ட் போர்டு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

3-ந் தேதிக்குள் நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் மசூதி கட்டும் பணியில் நாங்கள் ஈடுபடுவோம், என சமுதாய தலைவர்கள் கூறினார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment