புதுடெல்லி:எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி அமைவதன் முன்னோடியாக, காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத 11 கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் ஒருமித்து குரல் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
அதிமுக, 4 இடதுசாரி கட்சிகள், ஐக்கிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா, அஸ்ஸாம் கண பரிஷத், மதசார்பற்ற ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் மூத்த தலைவர்கள் டெல்லியில் புதன்கிழமை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்)கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், “மூன்றாவது அணி அமைப்பதற்கு முதல் கட்டமாக, மக்களை பாதிக்கும் பிரச்னையில் ஒருமித்து குரல் கொடுப்பதற்காக நாடாளுமன்ற அணியை உருவாக்கியுள்ளோம்.அடுத்த கட்டமாக, கூட்டுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கொண்டுவரும் 6 ஊழல் தடுப்பு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் அதனை காங்கிரஸ் தனது தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திக் கொள்ளும். எனவே அந்த மசோதாக்கள் நிறைவேறாத வகையில் 11 கட்சிகளும் பார்த்துக்கொள்ளும்.
உலகமே நம்பிக்கையில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மூன்றாவது அணியும் அத்தகைய நம்பிக்கையின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளது”என்று தெரிவித்தார்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment