இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி வாகை சூடி இங்கிலாந்தை 5-0 என வைட் வாஷ் செய்துள்ளது.
இது 140 வருடகால ஆஷஸ் தொடரில் ஒரு புதிய சாதனையாகும். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியா இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இங்கிலாந்து இதே ஆஷஸ் தொடரில் 3-0 என இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதற்கு அஸ்திரேலியா தற்போது பழி தீர்த்துக் கொண்டுள்ளது. அது மட்டுமல்லாது கடந்த 2009ம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியா ஒரு முறை கூட ஆஷஸ் தொடரில் வெற்றி பெற்றதில்லை. அதற்கும் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இறுதியாக 2007ம் ஆண்டு 5-0 என இதே போன்று ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை வைட் வாஷ் செய்திருந்தது.

இன்றுடன் முடிவுக்கு வந்த ஐந்தாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 326 ஓட்டங்களையும், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 155 ஓட்டங்களையும் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 276  ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி 166 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 281 ஓட்டங்களால் படு தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலியா சார்பில் போட்டி நாயகனாக ஹாரிஸ் தெரிவானார். தொடர் நாயகனாக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜோன்சன் தெரிவானார்.  அவர் மொத்தம் இத்தொடரில் 37 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இதோடு ஆஷஸ் போட்டிகள் முடிவுக்கு வந்தாலும், ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுடன் இங்கிலாந்து தொடர்ந்து மோதவுள்ளது. அதன் பிறகு ஆஸ்திரேலிய அணி தென் ஆபிரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டு உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக திகழும் தென் ஆபிரிக்காவுடன் மோதவுள்ளது. இங்கிலாந்து இத்தொடரை முடித்துக் கொண்டு மே மாதம் இலங்கையுடன் மோதவுள்ளது. 


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment